உலகம் நமக்காக!

உலகம் நமக்காக!

Wednesday, 21 September 2011

கதை கேளு....கதை கேளு....1-குருவிகளும் 'அந்நியன்' சோடாவும்!

              நண்பர்களே....வணக்கம். சிறுவயதில் இருந்தே கதைகளைக் கேட்டும், படித்தும் வருகிறேன். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்கும். நூலகங்களில் தேடித் தேடி கதைப் புத்தகங்கள் படித்த காலம் உண்டு. பஞ்ச தந்திர கதைகள், கிரேக்க கதைகள், முல்லா கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று தொடங்கிய வாசிப்பு அண்ணா, கல்கி, தேவன், ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்கள் வரை நீண்டது. பள்ளி உணவு இடைவேளையில், நான் படித்த 'காமிக்ஸ்' ராஜா ராணி கதைகளைக் கேட்க என்னுடன் உணவருந்தும் நண்பர்கள் - இன்றும் என் பசுமையான நினைவில். பல குட்டிக்கதைகள் அடிக்கடி என் நினைவில் வரும். அதுவும் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப அந்தக் கதைகள் இருப்பது எனக்கு ஆச்சர்யமே! அப்படிப் பட்ட குட்டிக்கதைகளையும் என் சிந்தனைகளையும் சேர்த்து உங்களோடு பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இந்தக் கதைகள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இருப்பினும் இது உங்களுக்கு சில நினைவுகளையும் சிந்தனைகளையும் எழுப்பினால் மகிழ்ச்சியே!
----------------------------------------------------------------------
              ஒரு ஊர்ல வயல்வெளி பக்கத்துல ஒரு மரம் இருந்துச்சு. அதுல ஒரு அம்மா குருவியும், குட்டிக்குருவியும் இருந்துச்சு. ஒரு நாளு அந்த வயலுக்குச் சொந்தக்காரர் தன்னோட மகனோட அந்தப் பக்கம் வந்தார். "இந்த பக்கம் போய் வர இந்த மரம் இடைஞ்சலா இருக்கு. நாளைக்கு அடுத்த ஊர்ல இருந்து ஆளுங்களை வரச் சொல்லு. இந்த மரத்தை வெட்டிடுவோம். சரியா" என்றவாறே சென்றார் அப்பா. இதைக் கேட்டுகிட்டு இருந்த குட்டி குருவி, "யம்மா, யம்மா...இந்த மரத்தை நாளைக்கு வெட்டப் போறாங்களாம். நாம வேற மரத்துக்கு போய்டலாம்" என்றது. அம்மா குருவி, "அதெல்லாம் வெட்ட மாட்டாங்க...நீ பயப்படாதே" என்றது. நாட்கள் உருண்டோடியது.


              அதே மரம் - அம்மா குருவி, குட்டிக்குருவி - அப்பா, மகன். "இந்த பக்கத்தூர்காரங்களே இப்படித் தான். சொன்னா சொன்னபடி வரதில்ல. நாளைக்கு உங்க சித்தப்பன்களை கூட்டிகிட்டு வந்து வேலைய முடிக்கணும்" என்றபடியே சென்றார் அப்பா. மறுபடியும் பதைபதைத்தது குட்டிக்குருவி. "அச்சச்சோ...நாளைக்கு கண்டிப்பா மரத்தை வெட்டிடுவாங்க போல. நாம வேற மரத்துக்கு போலம்மா" என்ற குட்டிக்குருவியிடம் அம்மாக்குருவி பதட்டமில்லாமல் சொல்லியது, "அதெல்லாம் ஒன்னும் ஆகாது...நீ பேசாம இரு". மீண்டும் நாட்கள் உருண்டோடியது. 

               மீண்டும் அப்பக்கம் வந்த அப்பா, "இது சரிபட்டு வராது. அவன் அவன் 'எனக்கு வேலை இருக்கு. அது இது'னு சொல்லிக்கிட்டு இருக்கானுங்க. சாயங்காலம் நானே வரேன். இந்த மரத்தை வெட்டிட்டு தான் மறுவேலை" என்று மகனைப் பார்த்துச் சொன்னார். இதைக் கேட்ட குட்டிக்குருவி, "இவங்க எப்பவுமே இப்படித் தான். மரத்தை வெட்டவே மாட்டாங்க" என்று சிரித்துக்கொண்டே சொன்னது. அம்மா குருவியோ பதட்டத்துடன், "நாம உடனே வேற மரத்துக்குப் போகணும். இவங்க மரத்தை வெட்டிடுவாங்க" என்றது. "இப்போ மட்டும் ஏன் இப்படி"னு கேட்ட குட்டிக்குருவியிடம் அம்மா குருவி சொன்னது "இவங்க இவ்வளவு நாள் ஒரு காரியத்தை முடிக்க மத்தவங்களை நம்பிகிட்டு இருந்தாங்க. எப்போ இவங்களே செய்யணும்னு இறங்கிட்டாங்க. அப்போ காரியம் முடியப் போகுதுன்னு அர்த்தம்". அம்மாவை ஆச்சர்யத்துடன் பின்தொடர்ந்தது குட்டிக்குருவி.

             அம்மா குருவி சொன்னது குட்டிக்குருவிகு மட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தான். என் கல்லூரி நண்பனுக்குத் திருமணம். என்ன பரிசு கொடுக்கலாம்னு விவாதம் கிளம்பியது. ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். ஒரு நண்பன் வங்கியின் 'பரிசு அட்டை' (Gift card) கொடுக்கலாம்னு சொன்னான். பொதுவாக வங்கிகள் வழங்கும் டெபிட் கார்டு போன்றே அதை நாம் பயன்படுத்தலாம். ஆனால் காசாக எடுக்க முடியாது. எதாவது பொருள் வாங்கி விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் காசாகக் கொடுக்காமல், பரிசையும் நண்பனே தேர்வு செய்துக் கொள்ளலாம். இதெல்லாம் சரி. எந்த வங்கி அதைக்கொடுக்கிறது, அதற்கான கட்டணம் என்ன, நண்பன் வெளிநாட்டில் இருப்பதால் அதைப் பயன்படுத்த முடியுமா என்பது போன்ற பல கேள்விகள். இப்போதுதான் ஆரம்பித்தது விளையாட்டு. விவரங்கள் யாருக்குத் தெரியும் என்று கேட்கத் தொடங்கினார்கள். யாராவது விசாரியுங்களேன் என்ற குரல்கள் கேட்டது. இது போன்றச் சமயங்களில் எனக்கு 'அந்நியன்' பட 'சோடா' காட்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

              'அந்நியன்' படத்தில் ஒரு காட்சி. ரோட்டில் ஒருத்தர் அடிபட்டுக் கிடப்பார். அப்போது ஒருத்தர் 'யாராவது சோடா வாங்கிட்டு வாங்களேன்'னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு ஒன்னும் பண்ணாம நிற்பார். இது நினைவுக்கு வந்தவுடன் சோம்பல்களை உதறிவிட்டு எனக்குள்ளிருந்து ஒரு 'அந்நியன்' வெளியே குதித்து விடுவான். யாராவது செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கணும்? நம்மால செய்ய முடியுமா, முடியாதா? 'முடியும்' என்பது விடையாக இருந்தால் களத்தில் இறங்கி விடுவேன். இது நம்மால் ஆனதை செய்யாமல் 'வாய் வேதாந்தம்' பேசுவதை தவிர்க்க நான் கையாளும் முறை. நம்மால் முடிந்ததை நாமே செய்வோம். ஏன்னென்றால் மற்றவர்களுக்கு உங்கள் வேலையில் இருக்கும் அக்கறையை விட உங்களுக்கு உங்கள் வேலை மேல் இருக்கும் அக்கறை அதிகமில்லையா?

 

6 comments:

Venkatasubramanian Rathinavelu said...

Nalla thodakkam, innum neraya yeluthungal. Vazhtukkal

sontha sarakku said...

நன்றி வெங்கட்!!

Jero Alex said...

இந்த எழுத்து நீங்கள் இரண்டு கதைகள் இடையே ஒரு நல்ல தொடர்பு உருவாக்கி,ஒரு தார்மீக சிந்தனை அளித்தது

sontha sarakku said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜெரோ! தொடர்ந்து வாங்க..

karthikeyan pandian said...

true!!! we have to do our work :)

vimalanperali said...

செயலே சிறந்த சொல் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிற பதிவு,நன்றி.வணக்கம்,நமது வாழ்வின் வெளியெங்கும் பறந்து, பறந்து கற்றுத்தருகிற குருவிகளின் செயலகள் காணகண் கோடிவேண்டும்.